• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பேரறிஞர் அண்ணா சிங்கப்பூர், மலேசியா சென்று வந்தபோது..

சினிமா

பேரறிஞர் அண்ணா சிங்கப்பூர், மலேசியா சென்று வந்தபோது (முதல்வராவதற்கு முன்பு) சென்னை கடற்கரையில் வரவேற்பு விழா நடைபெற்றது. மிகப் பெரிய கூட்டம். நெரிசல் அதிகமாக இருந்ததால் போலீசார் தடியடிப் பிரயோகம் செய்ய நேரிட்டது. இதில் இளைஞர் ஒருவருக்குத் தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது.

மேடையில் தலைவர்களுடன் அமர்ந்திருந்த புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். இதனை எப்படியோ கவனித்துவிட்டார். அப்போது இருந்த கூட்ட நெரிசலில் கீழே இறங்கி வருவதே மிகவும் கஷ்டம். நினைத்திருந்தால் வேறு யாரையும் அனுப்பி அந்த இளைஞரைக் கவனிக்கச் செய்திருக்கலாம்-அப்படியில்லாமல் அவரே கூட்டத்தை விலக்கச் செய்து மேடையிலிருந்து கீழே குதித்தார்.

அடிபட்ட இளைஞரின் தலை முடியைப் பிரித்து காயம் பெரிதாக இருக்கிறதா என்று பரிவோடு பார்த்தார். தன்னுடைய கைக்குட்டையை அந்தக் காயத்தில் வைத்து அழுத்தி, உதவியாளரை அழைத்து, உடனே அவருடைய காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். இந்த இரக்கமுள்ள செயல் என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டது.

அந்த இளைஞரின் காயத்தை அவர் பார்த்துக் கொண்டிருந்தபோது மிகவும் சிரமப்பட்டுப் படம் எடுத்துவிட்டேன். உடனே அவர் திரும்பிப்பார்த்து, ‘இதையெல்லாமா படம் எடுப்பது?’ என்று செல்லமாகக் கடிந்து கொண்டார்.
 

Leave a Reply