நான் வியந்த கவியரசு ..
சினிமா
அறிவியல் வளர்ச்சியால் பல சொற்கள் நம்மை விட்டு மறைந்துவிட்டது.புதிய சொற்கள் அந்த இடத்தை நிரப்பிவிட்டது.அந்தக் காலத்தில் நீர் இறைக்க ஏற்றம் இருக்கும்.அதெல்லாம் இப்போது இல்லை.இந்த ஏற்றம் தண்ணீர் இறைக்கும்போது வணங்கி நிற்கும்.தண்ணீரை மொண்டுவிட்டால் நிமிர்ந்துகொள்ளும்.அதற்குப் பெயர் தான் ஏற்றம்.நம்மகிட்ட காரியம் சாதிக்கிற வரை கையை கட்டிக்கொண்டு நிற்பான். சாதித்த பிறகு ஏத்தம் வந்துவிடும்.மனித இயல்பு.அந்த ஏற்றம் இப்போது இல்லை.இந்த ஏத்தம் இனியும் இருக்கு.ஓட்டு வாங்குகிற வரை நம்மைக் கும்பிடுகிறான்.ஜெயித்த பிறகு?. நாம் கும்பிடுகிறோம்.நமக்கெல்லாம் தாயுமானவர் தெரியும்.அவரது குருவைத் தெரியுமா?. அவரது பெயர் மௌன குரு.திருமூலர் வம்சம்.மௌன குரு உபதேசம் ஒன்றிருக்கிறது.மகனே கேள்!..மண் தண்ணீர் நெருப்பு காற்று ஆகாயம் நீயில்லை.சுவை ஒளி ஊறு நாற்றம் ஓசை கூட நீயில்லை.மனம் புத்தி சித்தம் அகங்காரம் நீயில்லை.பிறகு எது தான் நான்?. அட மடையா!.. அறிவு தான் நீ.
பாராதி பூதம்நீ அல்லை! ..
பார் இந்திரியம் கரணம் நீ அல்லை
ஆராயும் அறிவு நீ என்றான்.
தமிழ் இலக்கியத்தில் சமய இலக்கியம் என்ற ஒன்றை உருவாக்கியவன் தமிழன்.ஏழாம் நூற்றாண்டில் இந்த இலக்கியங்கள் இங்கு செழித்தோங்கியது.அதில் எண்ணற்ற பொக்கிஷங்கள்.
நம்பினார் இறந்தால் நமன்தமர் பற்றி
எற்றிவைத் தெறியெழு கின்ற
செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ
தழுவென மொழிவதற் கஞ்சி.
திருமங்கையாழ்வார் என்ன சொல்கிறார்?. அடப் பாவி!.. இந்த உடம்பு வேறு நீ வேறு.சில பேர் தேகாத்மாவாக அலைகிறார்கள்.இந்த உடம்பைத் தான் நான் என நினைத்துக்கொள்கிறார்கள்.என்னங்க இப்படி இளைச்சுட்டீங்க?. வாக்கியமே பிழை.இளைத்தது நானல்ல!.. எனது சரீரம்.ஆத்மா எப்போதும் இளைக்காது.சட்டை லூசாயிடுச்சு.அதே சட்டை தான்.நீ தான் லூசு.அறம்பாவம் எனும் கயிற்றால் கட்டி என சிவபுராணத்தில் வருகிறது.அறமும் பாவமும் ரெண்டும் சேர்ந்து கட்டிய தேகம்.மௌனகுரு சொன்ன அறிவும் ஆழ்வார் சொன்ன ஆன்மாவும் ரெண்டும் ஒன்று தான்.எதற்கு இதெல்லாம் சொல்கிறேன் என்றால் நமது இலக்கியங்களை கொஞ்சமாவது இந்தத் தலைமுறை படிக்க வேண்டும்.இலக்கிய இன்பம் தொட்டுச் சுவைத்தால் தான் தெரியும்.ஆன்மீக இலக்கியம் போரடிக்கிறதா?. ஜாலியான இலக்கியம் இருக்கு.
தலைப்பை விட்டு விட்டு எங்கடா போகிறாய்?. கவியரசைப் பாட வந்துவிட்டு கண்டதைப் பாடுகிறாய்!.. இந்த இலக்கியக் கடலில் மூழ்கி எழுந்ததால் தான் அவர் கவியரசு.அதே கடலில் மூழ்கி எழ நமக்கென்ன தயக்கம்?. தொட்டனைத் தூறும் மணற்கேணி !.. எங்க தங்கச்சி இப்பத் தான் சொல்லுச்சு!..ஆணவ அழுக்கடையும் ஆவியை விளக்கிய பாவி என்பார் அருணகிரியார்.பாத்திரத்தை விளக்குவோமே அதே போல் அழுக்கடைந்த பாவியை விளக்கி பளபளப்பாக்க நமக்கென்ன தயக்கம்?.அறிவு எனும் சோப்பெடுத்து விளக்க இலக்கியமும் தெரியணும்.கவிஞர் நுழைந்த இலக்கியம் தமிழில் நிறைய இருக்கு.உலகிலேயே தமிழன் தான் நிலத்தை ஐந்தாக்கினான்.அதிலொன்று நெய்தல்.கவியரசு இந்த நெய்தலைத் தான் ஒரு பாடலில் நமக்கு நெய்து தருகிறார்.அடப் பாவி!.. முதலில் இதைச் சொல்லித் தொலைய வேண்டியது தானே!..
எனது பதிவுகள் எப்போதும் கொஞ்சம் நீளமானவை!..காரணம் உண்டு.வெறுமனே இசைக்காக நாம் இங்கே கூடவில்லை.ஈன்று புறந் தள்ளுதல் மட்டும் எனது வேலையல்ல .சான்றோனாக்குதல் என்ற தந்தையின் கடனும் எனக்கிருக்கிறது.இன்று என்ன தெரிந்துகொண்டோம் என்பதில் தான் இந்த நாள் பயனாகிறது.நீளமா இருந்தால் சத்தமில்லாம நீங்க பாட்டையே கேட்கலாம்.இப்போ நாம நெய்தலுக்குப் போகலாம்.மூன்று பக்கம் கடல் சூழ் நிலத்தில் கடலோர மக்களின் வாழ்க்கைச் சொன்னது தான் நெய்தல்.
ஊதல் ஈட்டிய உயர் மணல் அடைகரை
கோதை ஆயமொடு வண்டல் தைஇ
ஓரை ஆடினும் வயங்குநின் ஒளியென
குறுந்தொகைப் பாடல்.நெய்தல் நில மக்களின் ஒரு விளையாட்டைச் சொல்கிறது.இந்த விளையாட்டிற்கு கூடல் இழைத்தல் என்று பெயர்.கண்ணைக் கட்டி கடல் மணலில் வட்டமிட்டபடி செல்ல வேண்டும்.அவிழ்த்து விட்டு 0000 த்தை எண்ணினால் இரட்டைப் படை வந்தால் தலைவன் வரப்போகிறான் என்று அர்த்தம்.ஊதக் காற்று வீசும் மாலை நேர மணற்பரப்பு.ஆயமொடு என்றால் தோழிகளோடு ஆடும் ஆட்டம். ஆடையால் வட்டத்தை மூட சிவ பெருமான் தேடி வருவான்.எதைத் தேடி?. வட்டம் போட்டது அத்தனையும் முழு நிலா!.. இந்தப் பொண்ணு ஆடையால் மூட எங்கடா தலையிலிருந்த பிறை நிலாவைக் காணோமே!.. என தேடி வருவான் ஈசன்.எப்படியிருக்கு விளையாட்டு.?. ஈசனை ஈர்க்க இந்தக் கூடல் இழைத்தல் இந்தப் பொண்ணுங்க வேலை.. இதே போன்றதொரு கூடலுக்குத் தான் அங்கொரு பெண்ணும் ஈசனை அழைக்கிறாள்.நமக்கெல்லாம் தெரிந்த திருவிளையாடலில்.கவிஞருக்கு வேலை வருகிறது.திருவிளையாடற் புராணத்தில் வரும் நெய்தல் நில விளையாட்டு.உமையவள் எடுத்த அவதாரத்தில் ஒன்று.
தேன்நோக்கும் கிளிமழலை உமைகேள்வன் செழும்பவளம்
தான் நோக்கும் திருமேனி தழலுருவாஞ் சங்கரனை
வான்நோக்கும் வளர்மதிசேர் சடையானை
என வரும் அதே ஆதி சிவன் விளையாட்டு.தேவாரத்தில் ஞானசம்பந்தர் பாடிய அதே தோடுடைய செவியனை ஆவலோடு காத்திருக்கும் உமையவள்.வெறும் செவியன் அல்ல.தோடுடைய செவியன்.இங்கே பரதவப் பெண்ணாக.கடலும் கடல் சார்ந்த தொழிலும் பரபரப்பாக இயங்க இங்கே பாங்கியொருத்தி பாடல் இசைக்கிறாள்.ஆதவன் வருகைக்காக காத்திருக்கும் தாமரையாள்.சூழ்நிலை கவிஞருக்கு விளக்கப்படுகிறது.ஏ.பி.என்.அதிலெல்லாம் கில்லாடி.எப்படி அவரிடமிருந்து சரக்கை வாங்க வேண்டுமென்று அவருக்குத் தெரியும்.நாகராஜன் என்றால் கவிஞரும் உற்சாகமாவார்.இந்த முறை மதிப்பிற்குரிய மாமா.கவிஞரே இந்தக் கடலையும் இந்த கன்னியையும் இணைச்சு எனக்கொரு பாட்டு வேணும்.சிச்சுவேஷன் இது தான்.ஆண் ஸ்பரிசம் அறியாத மீனவப் பெண்.அவனது ஜோடியின் வரவுக்காக ஏக்கத்தோடு பாடுறா!..கொஞ்சம் கிறக்கம் இருக்கணும்.கவிஞரின் மனக் கண்ணில் கடற்புறம் தெரிகிறது.கங்கு கரை காணாத கடல்.ஏதோ ஒரு ஏக்கத்தோடு கரையில் முட்டி மோதும் அதன் அலைகள்.மனித உணர்வுகளின் நுட்பமான காதல் உணர்வை தன்னகத்தே கொண்ட கடல்.காதல் உணர்விற்கு பாத்திரமான தலைவனின் வரவுக்காக காத்திருக்கும் கன்னியைப் போல் ஒத்த உருவம் கொண்டு அல்லாடுகிறாள் இந்த அலை மகள்.அகப் பொருள் வரிசையில் ஆயிரம் பாடல் தந்த கவிஞருக்கு இது ஒன்றும் கடினமல்ல!..சிந்தனை சிறகடிக்க பல்லவியைச் சொல்கிறார்.பக்குவமாய் பக்கத்தில் பேடும் பேனாவுமாய் அவரது நிழல்.
நீலச் சேலை கட்டிக்கொண்ட சமுத்திரப் பொண்ணு நீ
நெளிஞ்சு நெளிஞ்சு பார்ப்பதென்ன?. சொல்லடி கண்ணு!..
மாமா ரெடியாகிறார்.புகழேந்தி மெட்டைப் பிடித்துவிட்டார்.ஆர்மோனியத்தில் விரல்கள் விளையாட ஏ.பி.என்.தலையாட்டுகிறார்.கண்ணை மூடி அவரும் அவுட்டோரில்.மாமா பி.ஜி.எம் பக்காவா இருக்கணும்!..எக்ஸ்ட்ரா நிறைய இருக்கு!..நாம் கவிஞரையே பார்க்கிறோம்.அனு பல்லவிக்காக!..
யாரைக் காண துடிக்கிறயோ..கரையில நின்னு!..அந்த
ஆள் வராம திரும்பிறியோ சொல்லடி கண்ணு!..
வெரிகுட் கவிஞரே!... படிப்பறிவில்லாத இந்த பரதவ குலம்.இப்படித் தான் எளிமையா இருக்கணும்!.. ஆனாலும் இவளது வாலிபம் எதையோ ஏங்கித் தவிக்கிறது.அந்த உணர்வுகளுக்கு ஒரு வடிகால் தேடுகிறாள்.கடலைப் பார்க்கிறாள்.தன்னைப் போலவே எதையோ ஏக்கத்தை தேக்கி வைத்துக் கொண்டு அல்லாடுகிறது இந்தக் கடல்.அந்த சொல்லடி கண்ணு பாசத்தின் வெளிப்பாடு.தங்களது வாழ்க்கையே இந்தக் கடலை நம்பித் தான்.அவளுக்கே ஒரு சோகமென்றால்!.. என்னடி செல்லம்!..யாரைத் தேடிடா இப்படி கரைக்கு வந்து வந்து போகிறாய்?. கடலோடு உரையாடுவது தமிழனின் ஊணோடு ஊறிப் போனது. தாழ நின்ற ததைமலர்க் கையினால் ஆழி மன்னொரு வன் உரைத்தான் என்பான் கம்பன்.வீட்டுக்கு மாப்பிள்ளை வந்தால் மாமியார் ஓடி வருவார்.மச்சினன் ஓடிப் போய் பாய் போடுவான்.உதறிப் போடணும்.தமிழர் பண்பாடு.உதறும்போது ஒரு தென்றலடிக்கும்.பாய் அப்படியே அலை அலையாய் காற்றிலாடும்.ராமன் இங்கே மாப்பிள்ளையாகிறான்.கம்பன் அலை பாயும் பாயை கடலுக்கு ஒப்பாக்குகிறான்.
சேய காலம் பிரிந்தகலத்
திருந்தான் மீண்டும் சேர்க்கையின்பால்
மாயன் வந்தான் இனி வளர்வான்
என்று கருதி வரும்தென்றல்
தூய மலர்போல் நுரைத்தொகையும்
முத்துஞ் சிந்திப் புடைசுருட்டி
பாயல் உதறிப்படுத்தே
ஒத்த திரையின் பரப்பம்மா!..
சொல் மற்றும் பொருட்சுவையில் கம்பனை மிஞ்ச ஆளில்லை!.. இங்கு கவியரசும் கம்பனாகிறார்.எளிய கம்பன் நம் இனிய கம்பன்.ஆழி சூழ் அலைகள் ஏதோ ஒரு ஏக்கத்தைச் சொல்கிறது.அதை அப்படியே ஆற்றுப்படுத்துகிறாள் கரையிலிருக்கும் கன்னி.ஓருடலாக ஏங்கித் தவிக்கிறயே இன்னொரு உடலும் உன்னோடு இணைந்ததை நீ கவனிக்கவில்லையா?. இணைந்த பிறகும் உன் துடிப்பு ஏன் அடங்கவில்லை?. உன்னை விட நான் பாவமில்லையா?. எனைத் தழுவ இது வரை எவனும் வந்தபாடில்லையே!..எங்க ஆளுங்க வலை வீசி கயிறு போட்டும் ஏன் இப்படி திமிறுகிறாய்?. ..
வலையை வீசி கயிறு போட்டு வளைக்கவில்லையா?. நதி
வந்து வந்து உன்னுடலில் கலக்கவில்லையா?.
கலப்பதனால் புதிய இன்பம் பிறக்கவில்லையா?.இன்பம்
பிறந்த பின்பும் உன் துடிப்பு அடங்கவில்லையா?.
கொஞ்சம் கடுப்போடு தான் கேள்விக் கணைகள் வருகிறது.பிறகு என்ன?. தனிமையிலா கிடக்கிறாய்?. நதியெனும் காதலன் ஓயாமல் வந்து கலந்துகொண்டே இருக்கிறானே!..உன்னுடன் புரண்டு புரண்டு எழுகிறானே!..பிறகும் எதற்கிந்த தவிப்பு?. என்னைப் போல தனிமையிலா தவிக்கிறாய்?. மீள முடியாக் காம நோயால் என்னைப் போலவா இருக்கிறாய்.காதலன் வரவை எண்ணி கண்கள் துஞ்சவில்லை.வந்து தொலைத்தாலோ தூக்கமில்லை!..பருவத்தின் பெருந் துயர்.வள்ளுவனுக்கே பொறுக்கவில்லை.
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆர்அஞர் உற்றன கண்.
பெண்களின் கண்கள் படும் துயரத்தை இன்பத்துப் பாலில் சுவைக்கலாம்.கவிஞரின் கன்னிக்கும் அதே கண்கள்.நெஞ்சம் விம்மித் துடிக்கிறது நெருங்க எவனும் இல்லையே என்று.சரணங்களில் அதை அப்படியே போட்டு உடைக்கிறார் கவியரசு.
எனக்கும் நெஞ்சம் துடிக்குதடி திருமணம் கொள்ள மனம்
ஏங்கி ஏங்கி தவிக்குதடி இன்பத்தை அள்ள
உனக்கு வந்த அனுபவத்தை சொல்லடி மெல்ல
எனக்கும் ஒருவன் வந்து சேரும்போது அவனிடம் சொல்ல.
கவிஞர் எப்போதுமே கடைசியில் தனது முத்திரையை நச்சென பதிப்பார். இந்தப் பாடலிலும் இறுதி வரிகளில் நாம் அப்படியே சொக்கிப் போகிறோம்.பெண் இன்பம் அறியாத ஆண்கள் உண்டு.வாலிபம் நெருங்க நெருங்க அந்த இன்பம் எப்படியிருக்கும்?. அசை போடும் ஆண் மனம் போலவே பெண் மனமும் அசைபோடும் என்கிறது நமது இலக்கியங்கள்.நதி கலந்த அனுபவம் கடலுக்கு இருக்கு.வண்டலோடு வந்து கலக்கும் நதியின் மோகம் கடலுக்குத் தெரியும்.அது கூடல் இன்பம்.இது ஊடலின் பிரிவல்ல.இன்னும் கூடவே இல்லை!.. எப்படியிருக்கும் அந்த அனுபவம்.பக்கம் வந்து என்னிடம் மட்டும் கொஞ்சம் சொல்லடி என் தங்கம்!.. அப்படியே பொத்தி வைத்து யாருக்கும் சொல்லாமல் எனக்கானவன் வரும்போது அவனிடம் மட்டுமே சொல்கிறேன்.ஓ..கே ..வா!..அலை மகளோடு அந்த தமிழின் தலை மகன் விளையாடிய அருமையான அனுபவம். திருவிளையாடலில் இந்த அருமையான பாடலில் நம்மை வியக்க வைக்கிறார் கவியரசு.
இசை கூட்டிய திலகத்தை எப்படிப் பாராட்டுவது.அந்த ஏ..லே...லோ... ஒன்று போதுமே.அப்படியே கடற்புரத்து ஈர மணலில் கால் தடம் பதிக்கும்போது அதன் ஈரம் உடல் முழுவதும் பரவுமே அப்படியொரு பரவசம் பாடல் முழுவதும்.குரல் கொடுத்த இசையரசியை எத்தனை தடவை பாராட்டுவது?. கவிஞரின் வரிகளில் உள்ள விரக தாபத்தை ஒரு சொட்டு விடாமல் பருகித் தொலைத்திருக்கிறார்.அந்த ஏ..லே..லோ..அதைத் தான் உணர்த்துகிறது.அவருக்காகவே ஒரு பதிவு போடணும்.என்ன செய்வது?. கவிஞருக்கான இடம் அதற்கு அனுமதியில்லை என்கிறது.அட்டகாசமாக படமாக்கிய ஏ.பி.என்.எல்லாவற்றிற்கும் சிகரம் அந்த விரக தாபத்தை வெளிப்படுத்திய முகம்.70 எம்.எம்.ஸ்கிரீனில் காண வேண்டும்.இசையரசியிடம் ஒரு கேள்வி.உங்களது குரலை அப்படியே உள் வாங்கியதில் யார் சிறந்தவர்?. அந்த பொல்லாத பொம்பளை பட்டென சாவித்திரி என்றது தான் ஆச்சரியம்! .. எவ்வளவோ நடிகைகள் அச்சு அசலாக உணர்வுகளை வெளிப்படுத்தினாலும் உச்சிக்குக் கொண்டு போனது இந்த நடிப்பு ராட்சசி அல்லவா!..எனக்கும் ஒருவன் வந்து சேரும்போது அவனிடம் சொல்ல.அங்கே ஒரு கண்ணடிப்பார்.அடடா!...அங்க தான் நிக்குது அந்த மகாநடி!..இன்னும் பேசலாம் நண்பர்களே கவிஞரின் இன்னொரு நடியோடு!.. நீளத்திற்கு பொருத்தருள்க!..கவிஞருக்கான நூற்றாண்டு விழா களைகட்டும் இந்த நேரத்தில் அவரது கை வண்ணத்தில் வந்த அருமையான பழைய பொக்கிஷம் இந்தப் பாடல்.இன்னும் இது போல் நிறைய இருக்கிறது.ஒவ்வொன்றாக எடுத்துப் போட கவிஞரின் தமிழோடு நாமும் கொஞ்சம் விளையாடும் வரை இது .
Abdul Samath Fayaz





















