மூடநம்பிக்கையால் வந்த வினை - மரணத்தின் விளிம்பிற்குச் சென்ற பெண்
சீனாவில் ஒரு பெண் தனது தலைவலியைப் போக்க 'பச்சையான மீன் பித்தப்பையை' உண்டதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்அனுமதிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், நீண்ட நாட்களாகத் தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
மீன் பித்தப்பையை பச்சையாகச் சாப்பிட்டால் உடல் சூடு தணியும், நச்சுக்கள் நீங்கும் மற்றும் ஒற்றைத் தலைவலி குணமாகும் என்ற பாரம்பரிய நம்பிக்கையை அவர் பின்பற்றியுள்ளார்.
சந்தையில் இருந்து 2.5 கிலோகிராம் எடையுள்ள மீனை வாங்கி வந்த அவர், அதன் பித்தப்பையை மட்டும் தனியாக எடுத்து பச்சையாக உண்டுள்ளார் சில மணி நேரங்களிலேயே அவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
அவரது நிலைமையைக் கண்டு பயந்த குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு "மீன் பித்தப்பை நச்சு" ஏற்பட்டுள்ளதையும், அவரது கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதையும் கண்டறிந்தனர்.
உடனடியாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டு, பிளாஸ்மா பரிமாற்றம் மற்றும் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் 'தொடர்ச்சியான சிறுநீரக மாற்று சிகிச்சை'வழங்கப்பட்டது.
ஐந்து நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்தச் சம்பவம் குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், "மீன் பித்தப்பை என்பது ஆர்சனிக் நஞ்சை விட ஆபத்தானது.
சில கிராம் பித்தப்பை கூட ஒரு மனிதனைக் கொல்ல போதுமானது," என எச்சரித்துள்ளார்.























