ஈரானுக்கு ஆதரவாக நிற்போம் - ரஷ்ய ஜனாதிபதி புடின்
மத்திய கிழக்கு மற்றும் ஈரான் நிலவரம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விவாதித்தார்.
மேற்காசிய நாடான ஈரானில் அடக்குமுறை மத ஆட்சிக்கு எதிராக, கடந்த இரு வாரங்களாக போராட்டங்கள் வெடித்துள்ளன.
பொருளாதார சீரழிவு, பணவீக்கம் ஆகியவை காரணமாக துவங்கிய இந்த போராட்டம், தற்போது அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற அளவுக்கு தீவிரமடைந்துள்ளது.
இதனால், ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புடின், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் நேற்று பேசினார்.
அப்போது, ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்ததாக ரஷ்ய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிப்பாக, ஈரானில் பதற்றத்தை தணிக்க தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரேலிடம் அவர் வாக்குறுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஈரான் ஜனாதிபதி மசவுத் பெஷெஸ்கியானிடமும், தொலைபேசியில் ரஷ்ய அதிபர் புடின் பேசினார்.
அவரிடமும், ஈரானில் அமைதியை ஏற்படுத்த தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு டிச., 28 முதல் ஈரானில் வெடித்துள்ள போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, புடின் நேரடியாக தொலைபேசியில் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
























